ஈரோடு: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை அளிக்க உள்ளனர். வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களை சந்திதார்.
அப்போது அவரிடம், வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நீண்ட நாட்களாக திரும்ப வழங்காமல் உள்ளது தொடர்பாக நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘வீட்டு வசதி வாரியத்தில் கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் சொத்து வகை என்பது முழுக்க முழுக்க வீட்டு வசதி வாரியத்திற்கானது. அதை யாரும் எதுவும் செய்ய முடியாது.
1 மற்றும் 2 பிரிவுகளில் உள்ள சிக்கல்களுக்கு முதலமைச்சரால் தீர்வு காணப்பட்டுள்ளது. சுமார் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 3வது, 4வது பிரிவுகளில் உள்ள பிரச்னைகளை தீர்வு காண 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான ஆய்வு பணிகள் நிறைவு பெற்றது.
நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து அந்த ஆய்வுக்குழுவினர் வழங்கும் அறிக்கையின்படி, அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அறிக்கை வந்துவிடும். வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் வழங்கியதே தெரியாமல், பலரும் சிரமப்பட்டு கடன் பெற்று, இடத்தை ஏமாந்து வாங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம்’’ என்றார்.
