கோவை: கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி மனைவி சங்கீதா (40). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது கணவர் கட்டிட தொழிலாளி. 2 மகன்கள் உள்ளனர். கோவை நகரில் இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மானிய உதவியுடன் 500 சதுர அடியில் வீடு கட்டினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒன்றிய அரசின் பார்வைக்கு கோவையில் ஒன்றிய அரசின் மானியத்தில் கட்டப்பட்ட வீடுகளின் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சங்கீதாவின் வீடு சிறந்த கட்டமைப்பாக தேர்வு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதியுடன் தேனீர் விருந்து நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவரை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து கலெக்டர் பவன் குமார் கவுரவித்தார். சங்கீதா கூறுகையில், எனக்கு ஆட்டோவை போல் கார் வாங்கி ஓட்ட வேண்டும் என ஆசை இருக்கிறது. இதற்கு அரசின் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
