பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த அந்த தீயை யாராலும் அணைக்க முடியாது.என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.

அவர் பேசியதாவது: ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதனால் தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ச்சி அடைகின்ற மாநிலங்களில் முதல் இடத்தில், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இரட்டை இலக்க வளர்ச்சி 11.19 சதவீத வளர்ச்சியோடு தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழ்நாடு வளர்ச்சி அடைகின்ற மாநிலங்களில் முதல் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் பார்த்தார் புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன இருக்கிறது என்று கேட்டார். பார்த்தால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது குறுக்கு வழியில் இந்தியைத் திணிப்பதற்கான வழிதான் இந்த புதிய கல்விக் கொள்கை. மீண்டும் சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கின்ற முயற்சிதான் இந்தப் புதிய கல்விக் கொள்கை.

மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது திணிக்க வேண்டும் என்கிற முயற்சி தான் இந்தப் புதிய கல்விக் கொள்கை முதல்வர் நிறுத்தினார், ‘ஏற்க முடியாது’ என்று சொன்னார்.ஒரு வரலாற்றை மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன். 1968ம் அண்ணா முதல்வரான உடனே ஒரு வேலை செய்தார். செய்து விட்டுச் சட்டசபையிலும் பேசினார், பதிவு செய்திருக்கிறார்.

அந்த வீடியோக்களைத் தொலைக்காட்சி வீடியோக்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், யூடியூபில் பார்த்திருப்பீர்கள். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைதான் இன்று தமிழ்நாட்டில், மும்மொழிக் கொள்கையை எந்த நேரத்திலும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன் என்று இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தார், அதுவரைக்கும் சென்னை மாகாணம் என்று இருந்தது. இந்த மூன்றையும் செய்துவிட்டு அண்ணா சொன்னார், ‘நான் இன்று ஆட்சியில் இருக்கலாம், இந்த மூன்று திட்டத்தையும் கொண்டுவந்து, அமல்படுத்திவிட்டேன். பிற்காலத்தில் பல வருடங்களுக்குப் பிறகு யாராவது இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் மனதில் ஒரு பயம் வரும்.

அந்தப் பயம் இருக்கிற வரைக்கும் இந்தத் தமிழ்நாட்டை ஆள்வது அண்ணாதுரை தான்’ என்று அண்ணா அன்று சொன்னார். இன்று அண்ணா வடிவில் தலைவர் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், அதைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த அந்தத் தீயை யாராலும் அணைக்க முடியாது. இவ்வாறு கூறினார்.

Related Stories: