மாணவர்களின் பேய் பயத்தை போக்க அமாவாசை அன்று நள்ளிரவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர்: வீடியோ வைரலால் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் ஆனந்த்பூரில் மண்டல் பரிஷத் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கடந்த வாரம் ரவீந்தர் எனும் ஆசிரியர் பணியிடம் மாற்றம் பெற்றுவந்தார். சம்பவத்தன்று 5ம் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது வெளியே இருந்த உள்ள மரக்கிளைகள் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்தனர். ‘’ஏன் இவ்வாறு பயப்படுகிறீர்கள்’’ என்று ஆசிரியர் ரவீந்தர் கேட்டபோது அதற்கு மாணவர்கள், ‘’இந்த வகுப்பறையில் பேய் உள்ளது. அதுதான், மரத்ைத முறித்து போட்டுள்ளது.

பேய் பயம் காரணமாக கடந்தாண்டு 5ம் வகுப்பில் படித்து வந்த ஷ்ரவன் என்பவன் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டான். வகுப்பறைகள் காலியாக இருக்கும்போதும் அங்கிருந்து விசித்திரமான சத்தம் வரும். எனவே நாங்களும் பேய் பயத்தில் உள்ளோம்’ என்றனர். இதனால் ஆசிரியர் ரவீந்தர், ‘’பேய் என்று எதுவும் கிடையாது. இதையெல்லாம் நம்பக்கூடாது’’ என்றார். ஆனாலும் மாணவர்கள் பேய் பயத்தில் இருந்து விலகவில்லை. இதனால் மாணவர்களுக்கு பேய் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்களின் பயத்தை போக்க வேண்டும்’ என்று முடிவெடுத்த ஆசிரியர் ரவீந்தர், கடந்த 5ம் தேதி அமாவாசை அன்று இரவு வகுப்பறையில் தனியாக படுத்து தூங்கி மறுநாள் எவ்வித பாதிப்பும் இன்றி எழுந்துவந்துள்ளார்.

இதன்பிறகு மறுநாள் காலை 6 மணிக்கு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே கூடினர். அப்போது ஆசிரியர் ரவீந்தர் வெளியே வந்து, மாணவர்களிடம் இப்போது நம்புகிறீர்களா எனக் கேட்டார். அதற்கு மாணவர்கள், ‘’பேய் இல்லை என்பது உண்மைதான், இனி நாங்கள் தைரியமாக இருப்போம்’’ என்று தெரிவித்ததுடன் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதனிடையே ஆசிரியரின் இந்த செயல் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post மாணவர்களின் பேய் பயத்தை போக்க அமாவாசை அன்று நள்ளிரவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: