வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் குறித்து மாநில திட்டக்குழு ஆலோசனை


திருப்போரூர்: தமிழ்நாடு திட்டக்குழுவின் சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்திற்கான மண்டல அளவிலான பயிற்சி செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் சுதா தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வரவேற்றார். திட்டக்குழுவின் கூடுதல் உறுப்பினர் விஜயபாஸ்கர், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் குறித்தும், அதற்காக நடத்தப்படும் மண்டல அளவிலான பயிற்சி குறித்து விளக்க உரையாற்றினார்.

திட்டக்குழு உறுப்பினர்கள் சுல்தான் அகமது இஸ்மாயில், அமலோற்பவநாதன், மருத்துவர் சிவராமன் ஆகியோர் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சேர்க்க வேண்டிய கூடுதல் அம்சங்கள், சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை ஆகியவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பான குடிநீர், தொடக்கக் கல்வி, உயர் கல்வி, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் அரசு துறை அதிகாரிகளும் நிர்வாகமும் எதிர் கொள்ளும் பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் முறைகள் ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 20 மாவட்டங்களை சேர்ந்த அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் கலெக்டர் அனாமிகா ரமேஷ் நன்றி கூறினார்.

The post வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் குறித்து மாநில திட்டக்குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: