பின்னால் இருந்து நெம்புவதற்கு பதிலாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் இழுத்ததால் நெல்லையப்பர் தேர் வடம் அறுந்தது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன், பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாங்குனேரி ரூபி மனோகரன் (காங்.) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில் வருமாறு: சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் கோயிலுக்கு கடந்த 2ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2022ல் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புராதன கோயில்களை புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 517 கோயில்கள் இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3வது பெரிய தேரான நெல்லையப்பர் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்டது. இந்த தேர் நேற்று இழுக்கப்பட்டது. தேரை பின்னால் இருந்து நெம்புவதற்கு பதிலாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒரே நேரத்தில் இழுத்ததன் காரணமாகவே தேர்வடம் அறுந்தது. அதற்கு மாற்றாக திருச்செந்தூர் தேர்வடம் தயாராக இருந்த நிலையில் அதனை இணைத்து 9.30 மணியவில் வெற்றிகரமாக 5 சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 450 டன் எடை கொண்ட அந்த தேரை நீளமான வடத்தைக் கொண்டுதான் இழுக்க முடியும்.

தமிழகத்தில் ஓடாமல் இருந்த தேர்கள் எல்லாம் புனரமைக்கப்பட்டு திமுக ஆட்சியில் இழுக்கப்படுகிறது. கண்டதேவி கோயில் தேரை 18 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டிய பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையே சாரும். திருக்குறுங்குடி நம்பி கோயில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. இதுபோன்று 34 கோயில்கள் கண்டறியப்பட்டு வனத்துறை செயலாளர் மற்றும் அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து பணிகள் நடத்தப்படுகிறது. நம்பி கோயிலில் கழிப்பறைகளை நிரந்தரமாக அமைக்க வனத்துறை அனுமதி தரவில்லை. அதனால்தான் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post பின்னால் இருந்து நெம்புவதற்கு பதிலாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் இழுத்ததால் நெல்லையப்பர் தேர் வடம் அறுந்தது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: