டிராக்டர், ஜீப் மீது பஸ்கள் மோதி 5 பேர் பலி: ரெய்டுக்கு சென்ற எஸ்ஐயும் உயிரிழப்பு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே கதிரையன்குளம் கருப்பணசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கிடா வெட்டி படையல் போடும் விழா நேற்று முன்தினம் இரவு துவங்கி விடிய, விடிய நடைபெற்றது. இங்கு ஆத்தூர் தாலுகா, சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 பேர் டிராக்டரில் வந்திருந்தனர். கறி விருந்து முடிந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊருக்கு புறப்பட்டனர். திண்டுக்கல்- பழநி சாலையில் கதிரையன்குளம் பகுதியில் திரும்பும்போது, திருச்சியில் இருந்து பழநி சென்ற அரசு பஸ் மோதி டிராக்டர் கவிழ்ந்து 16 பேரும் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சேடபட்டியை சேர்ந்த பெரியண்ணன் (33) உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 பேரில், சேடபட்டியை சேர்ந்த அழகுமலை (35), அசோக் (30) ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த ரெட்டிகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரவிளிகா(34). இவரது உறவினர் ஸ்ரீகாகுளம் கொத்தகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்மோகன்(17) உள்பட 11 பேர் ஒரு ஜீப்பில் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊருக்கு புறப்பட்டனர்.

காலை 5.45 மணியளவில் கலசபாக்கம் அடுத்த குருவிமலை அருகே சென்றபோது வேலூரில் இருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பஸ், ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் சாலையோர புளியமரத்தில் மோதி நொறுங்கியது. இதில் ஜெகன்மோகன், பிரவிளிகா இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஜீப் டிரைவர் உட்பட 9 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மதுரை, அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவரும், தலைமைக் காவலர் நாகராஜன் (43), காவலர் லோகேஷ்வரன் (34) ஆகியோரும் நேற்று ஒரே காரில் திருச்செந்தூர் பகுதியில் சோதனை செய்வதற்காக சென்றுகொண்டி ருந்தனர். திருச்செந்தூர் அருகே நத்தக்குளம் வளைவில் எதிரே வந்த போது வேனும், காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் எஸ்ஐ கார்த்திகேயன் உயிரிழந்தார்.

The post டிராக்டர், ஜீப் மீது பஸ்கள் மோதி 5 பேர் பலி: ரெய்டுக்கு சென்ற எஸ்ஐயும் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: