கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 76 நபர்களின் உடல்நிலை முன்னேற்றம்: 56 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு தீவிர சிகிச்சை; பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 76 நபர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிசிச்சை பலனின்றி 20ம் தேதி வரை 43 பேர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமாக இருந்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாகப்பிள்ளை (39), பாலு (50), தர் (40), சோலைமுத்து (65), ராஜேந்திரன் (60), ராஜேந்திரன் (55), ராஜா (43), வீரமுத்து (33) உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று சேஷசமுத்திரம் சுப்பிரமணியன்(40), கிடங்கன் பாண்டலம் சோலைமுத்து(65) உட்பட 3 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31 பேர், சேலத்தில் 17, விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் 4, ஜிப்மரில் 3 பேர் என மொத்தம் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

202 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில், தற்போது வரை உள் நோயாளியாக 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 97 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என 148 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 25 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழுவை சேர்ந்த வெளி மாவட்ட டாக்டர்கள் 56 பேர் 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிகிச்சையில் உள்ள மற்ற நபர்களில் பலரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தவர்களில் 76 பேர் நலமுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில் 2 பேர் மட்டுமே கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) நேரு தெரிவித்தார். உயிரிழந்த 55 பேரில் 46 பேரின் உடல்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை முடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், 8 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

* சிகிச்சை முடிந்து 30 பேர் டிஸ்சார்ஜ்; கள்ளக்குறிச்சி மருத்துவமனை டீன்
கலெக்டர் பிரசாந்த் அளித்த பேட்டியில், ‘கள்ளக்குறிச்சியில் கவலைக்கிடமான நிலையில் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. என்றார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) நேரு கூறுகையில், ‘கவலைக்கிடமான முறையில் இருந்த 5 பேர் சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்களில் நல்ல முறையில் சிகிச்சை பெற்று 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யும் அளவிற்கு தயார் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலமாக விஷசாராயம் குடிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

* மெத்தனால் சப்ளை விருத்தாசலத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை
கைதான மெத்தனால் வியாபாரி மாதேஷிடம் சிபிசிஐடி போலீசார், இந்த மெத்தனால் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஆன்லைனில் சென்னையில் இருந்து பெறப்பட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சென்னைக்கு எப்படி ஆன்லைனில் சென்றது என்பது குறித்து விசாரணை நடத்திய போது விருத்தாசலத்தில் செராமிக் கம்பெனி நடத்தி வரும் ஜோதி மற்றும் கேசவன் ஆகிய இரண்டு நபர்கள் இந்த மெத்தனாலை சென்னைக்கு கொடுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் பிடித்து கள்ளக்குறிச்சி கொண்டு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து செராமிக் தொழிலில் ஈடுபட்டு வரும் சிலர் கூறுகையில், ‘தற்போது இந்த தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. ஆனால் குறுகிய காலத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் சிலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததும், தற்போது விருத்தாசலம் பகுதியில் பல இடங்களில் அவர்கள் சொத்து சேர்த்து வருவதும் மிகப் பெரிய ஆச்சரியத்தை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது’ என்றனர்.

* கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் அதிமுக பிரமுகர் கைது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஏரி பகுதியில், கள்ளச்சாராய பாக்கெட்டுகளை அதிமுக விவசாய பிரிவு முன்னாள் செயலாளர் சுரேஷ் என்பவர் விற்பனை செய்து வந்தார். இது குறித்து கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஆத்தூர் ஊரக போலீசார் நேற்று அங்கு சென்றனர். அப்போது அதிமுக பிரமுகர் சுரேஷ், அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த மூட்டையை பரிசோதித்ததில், கள்ளச்சாராய பாக்கெட்டுகள் இருந்தது. அதிலிருந்த 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷை கைது செய்தனர்.

* சிகிச்சையில் இருந்து தப்பி சென்றவர் சாவு: கைது பயத்தில் ஒருவர் மாயம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த இளையராஜா(40) மற்றும் சேஷ சமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி (40), சின்னதுரை (38), ராஜா(38) ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமாகி விட்டனர். இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சங்கராபுரம் போலீசார் அவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இளையராஜாவுக்கு சாராய வியாபாரி ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்து வரும் நிலையில், தன்னையும் கைது செய்து விடுவார்கள் என பயந்து அவர் தப்பி ஓடினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தப்பி ஓடிய சுப்பிரமணியை தேடி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது சொந்த ஊரான சேஷசமுத்திரத்துக்கு நேற்று சென்று பார்த்த போது, அவரை சங்கராபுரம் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அழைத்து சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது, மருத்துவமனையில் சுப்பிரமணி இறந்துவிட்டது தெரியவந்தது. தப்பியோடிய சின்னதுரை, ராஜா ஆகியோர் சேஷசமுத்திரத்தில் உள்ள வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். இளையராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

* விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மீண்டும் குடித்து மருத்துவமனையில் ‘அட்மிட்’: அமைச்சர் வேதனை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷசாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2வது நாளாக நேற்று முன்தினம் இரவு சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவ குழுவினரிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘விஷ சாராயம் அருந்தியதில் பாதிக்கப்பட்டவர்கள் சேலம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக முதலமைச்சர் மருத்துவ குழுவையும், எங்களையெல்லாம் அனுப்பி பல்வேறு நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அவரின் துரித நடவடிக்கையால் பலர் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இவ்வளவு பேர் உயிரிழந்தபோதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் வீட்டில் வைத்திருந்த சாராயத்தை குடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மோசமான நிகழ்வு நடைபெற்று உள்ளது. இதுபோன்ற அறியாத்தனமானவர்களும் இருக்கிறார்கள். இதில் போதிய விழிப்புணர்வு தேவை’ என்றார்.

The post கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 76 நபர்களின் உடல்நிலை முன்னேற்றம்: 56 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு தீவிர சிகிச்சை; பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: