கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக பராமரிப்பதில்லை தமிழ்நாட்டில் ரயில் சேவை படுமோசம் ஓட்டை, உடைசல் பெட்டிகள் இணைப்பு: ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: தமிழ்நாட்டிற்குள் ஓடும் ரயில்களில் ஓட்டை, உடைசலான பெட்டிகள் இணைக்கப்படுகிறது. கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக பராமரிப்பதில்லை என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாற்றுத்திறனாளியான நான், நாடு முழுவதும் ரயிலில் பயணிக்கிறேன். ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டின்படி கட்டண சலுகை மற்றும் தனி இருக்கைகள் வழங்கப்படுகிறது. இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

அடையாள அட்டையை ஆன்லைன் வழியாகவே பரிசோதிக்கும் முறை கடந்த 2022ல் சென்னை ரயில் நிலையத்தில் அமல்படுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு ரயில்நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதனை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த நடைமுறை அமலாகவில்லை. இதனால் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கிறோம். எனவே, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை ஆன்லைன் முறையில் பரிசோதிக்கும் முறையை மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், ‘‘இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் ஏன் திருச்சி, சேலம், மதுரையில் மட்டும் அமலாகவில்லை? பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கான சேவை படுமோசமாக உள்ளது. கட்டணங்களை உயர்த்தினாலும் ரயில் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது’’ என்றனர். அப்போது ரயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ரயில்களில் பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய நவீன பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. விரைவில் முழுமையாக சீரமைக்கப்படும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘புதிய நவீன ரக ரயில்பெட்டிகள் பெரும்பாலும் வடமாநிலங்களில் தான் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டிற்குள் ஓடும் ரயில்களில் ஓட்டை, உடைசலான பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்’’ என்றனர். பின்னர் மனுவிற்கு தெற்கு ரயில்வே தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 8க்கு தள்ளி வைத்தனர்.

The post கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக பராமரிப்பதில்லை தமிழ்நாட்டில் ரயில் சேவை படுமோசம் ஓட்டை, உடைசல் பெட்டிகள் இணைப்பு: ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: