பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் ஒன்றிய நிதியமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: 2021-22ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட உரையில், ஒன்றிய நிதி அமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணியை ரூ.63,246 கோடி செலவில், ஒன்றிய அரசு திட்டமாக அறிவித்திருந்தார். இத்திட்டம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி திட்ட முதலீட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருப்பினும், பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக, காத்திருக்கிறது. முழுச் செலவினமும் மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்து தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், தமிழ்நாடு அரசிற்கு மாநில நிதியில் கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், இத்திட்டத்தின் செயல்பாட்டின் வேகத்தையும் குறைத்துவிடுவது கவலைக்குரியது, எனவே இத்திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், 2024-25 ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கான போதிய நிதியொதுக்கீடுகள் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். சென்ற ஆண்டு அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு எதிர்கொள்ள நேரிட்டதால், மாநில அரசின் நிதிநிலைமை மிகமோசமாக பாதிக்கப்பட்டது. பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,906 கோடியை மாநில அரசு கோரியிருந்த நிலையில், ஒன்றிய அரசு மிகக் குறைவாக ரூ.276 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது.

இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். தமிழக அரசுக்கு ரூ.3,000 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டினை நிறுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு ஏறத்தாழ ரூ.20,000 கோடி வருவாய் குறைவு ஏற்படுகிறது. 2011-12ம் ஆண்டில் 10.4சதவீதமாக இருந்த மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் 2022-23ம் ஆண்டில் 20.28 சதவீதமாக மொத்த வரி வருவாயின் சதவீதம் அதிகரித்துள்ளது.

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ், ஒன்றிய அரசு வீடு ஒன்றிற்கு ரூ.1.5லட்சம் மட்டுமே வழங்குகிறது, அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு வீடு ஒன்றிற்கு ரூ.12-14 லட்சம் தனது பங்களிப்பாக வழங்குகிறது. பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ், ஒன்றிய அரசு வீடு ஒன்றிற்கு 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கும் நிலையில் மாநில அரசு வீடு ஒன்றிற்கு ரூ.1.68லட்சம் தன் பங்களிப்பாக வழங்கி வருகிறது. தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தனது பங்களிப்பு தொகையை அதிகரித்து, ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களில் குறைந்தபட்சம் 50% பங்களிப்பை வழங்க வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

2015ம் ஆண்டின் உதய் திட்டத்தைப் போலவே, பகிர்மான நிறுவனங்களின் இழப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக, மாநிலத்தின் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் உச்சவரம்பு கணக்கீட்டிலிருந்து விலக்களிக்க வேண்டும். தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு இடையே 4வது இருப்புப்பாதை வழித்தடம், திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – ஓசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடம், அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி (143.5 கி.மீ.), மீஞ்சூர் – திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் – ஒரகடம் – சிங்கப்பெருமாள்கோயில் – மதுராந்தகம், சேலம் – ஓசூர் – பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் – எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை – சேலம் – கோயம்புத்தூர் ஆகிய இடங்களை இணைக்கும் மித அதிவேக ரயில் வழித்தடம் ஆகிய ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையேயான உயர்மட்ட சாலை மற்றும் செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரையிலான உயர்மட்ட சாலை அமைக்க முன்னுரிமையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சென்னை – கன்னியாகுமரி வழித்தடத்தை விரிவாக்கும் புதிய திட்டத்திற்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: