இலங்கை சிறையில் விடுதலையான 17 மீனவர்கள் சென்னை வருகை: மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்பு

மீனம்பாக்கம்: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் விமானம் மூலமாக இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 17 மீனவர்கள், கடந்த மாதம் 14ம் தேதி 3 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றிருந்தனர். இவர்கள் நடுக்கடலில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்டையினர் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர் மீன்களுடன் 3 விசைப் படகுகளை பறிமுதல் செய்து, 17 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 17 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்ட 17 மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இது குறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் அனுப்பி, இலங்கை சிறையில் உள்ள 17 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினார்.

இதையடுத்து இலங்கை சிறையில் உள்ள 17 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இலங்கை நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 17 தமிழக மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், 17 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்த மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர்.

அவர்களிடம் பாஸ்போர்ட், விசா இல்லாததால், அவர்களுக்கு தற்காலிகமாக 17 எமர்ஜென்சி சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சென்னை திரும்ப இந்திய தூதரகம் சார்பில் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பின்னர் அனைத்து நடைமுறைகளும் முடிந்து, இன்று காலை இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வரும் ஏர்இந்தியா விமானத்தில் 17 தமிழக மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இன்று காலை ஏர்இந்தியா விமானம் தரையிறங்கியது. அதில் வந்திறங்கிய 17 தமிழக மீனவர்களை தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 17 மீனவர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post இலங்கை சிறையில் விடுதலையான 17 மீனவர்கள் சென்னை வருகை: மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: