தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொதுப்பிரிவு, 7.5% இடஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளையுடன் நிறைவு

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான இணையவழி கலந்தாய்வு நாளையுடன் நிறைவு பெறுகிறது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பிரிவில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டன.

அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 12ம் தேதி வரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டன. அதன்படி, 33 ஆயிரத்து 973 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினர் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் 7.5 சதவிகித இட இதுக்கீட்டு மாணவர்களுக்கான இணையவழி கலந்தாய்வானது நேற்று தொடங்கியுள்ளது. நாளை (ஜூன் 25) மாலை 5 மணி வரை இந்தக் கலந்தாய்வானது நடைபெற உள்ளது. இந்த இணையவழி கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களின் விருப்பப்படி பட்டப்படிப்புகள் மற்றும் கல்லூரிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

கலந்தாய்வின்போது, மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடத்திட்டங்களை மாற்றம் செய்யவில்லை எனில் அவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது பூர்த்தி செய்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரியே இடஒதுக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். கலந்தாய்வுக்கு கட்டப்படும் கட்டணங்களில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களின் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

மேலும், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர்க்கை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பொதுக் கலந்தாய்வு இடஒதுக்கீட்டின் கீழும் பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை https://tnagfi.ucanapply.com என்ற இணையதள பக்கத்தில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

The post தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொதுப்பிரிவு, 7.5% இடஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளையுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: