ஒருநாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: உயர்கல்வி, பள்ளி கல்வி, வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது

சென்னை: ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. உயர், பள்ளி கல்வி துறை, வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை, மாலை என இருவேளைகளில் மானியக் கோரிக்கைகள் விவாதம் நடந்து வருகிறது.

இதுவரை நீர்வளத் துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை ஆகும். ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. சட்டசபை தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் உயர் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக் கல்வித் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேசுவார்கள்.

தொடர்ந்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள். மாலை 5 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள்.

இறுதியாக துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சபாநாயகர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். நேற்று முன்தினமும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* கேள்வி நேரம் முடிந்ததும் உயர் கல்வித் துறை,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக் கல்வித் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.

The post ஒருநாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: உயர்கல்வி, பள்ளி கல்வி, வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: