முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள் வழங்கியது, ஆள்மாறாட்டம், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண்கள் அளித்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் எழுந்தன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கும் நீக்கப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வையும் கடைசிநேரத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் ரத்து செய்து அறிவித்துள்ளது.  இந்த கடைசி நேர அறிவிப்பால் தொலைதூர மையங்களுக்கு தேர்வெழுத சென்ற தேர்வர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இளநிலை மருத்துவம் படித்து முடித்து, முதுநிலை தேர்வு எழுத காத்திருந்த ஏராளமான மருத்துவர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு ஒரு மோசடி என்பதையும், மாணவர்களுக்கு எதிரான, சமூகநீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்து தனது பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: யூஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.

நீட், நெட் என முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி, தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோப்போம். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: