சபரிமலை சீசனையொட்டி வியாழன் தோறும் நெல்லை – சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

நெல்லை: சபரிமலை சீசனை முன்னிட்டு நெல்லை – சென்னை இடையே வியாழன் தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கார்த்திகை மாதம் வருகிற 17ம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கிறது. அன்று முதல் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். பஸ், ரயில்கள், தனியார் வாகனங்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சபரிமலை சென்று வழிபடுவர்.

இந்நிலையில் சபரிமலை சீசனை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நெல்லை – சென்னை இடையே வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த சிறப்பு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. அதன்படி வந்தே பாரத் சிறப்பு ரயில், வருகிற 16ம் தேதி முதல் டிச.28ம் தேதி வரை வியாழக்கிழமைகள் தோறும் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) சென்னையில் இருந்து வியாழக்கிழமை தோறும் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு ெநல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து (வண்டி எண்: 06068) மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது. இரு மார்க்கத்திலும் திருச்சி ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக கூடுதலாக 5 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலை சீசனையொட்டி வியாழன் தோறும் நெல்லை – சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: