பையனூர் திரைப்பட நகரில் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி : திரைப்பட தொழிலாளர் சங்கம் வழங்கியது

செங்கல்பட்டு: பையனூர் திரைப்பட நகரில், சாலை அமைக்கும் பணிக்கு ரூ.35 லட்சம் நிதியை தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சங்கம் வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பையனூர் பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சார்பில், திரைப்பட நகர் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. அப்பணி முடிந்து விரைவில் தமிழக அரசு சார்பில், திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சங்கம் (பெப்சி) பையனூர் திரைப்பட நகர் பகுதியில் ‘நமக்கு நாமே திட்டத்தின்’ கீழ் சாலை அமைத்துக் கொடுப்பதற்காக மூன்றில் ஒரு பங்கு நிதியாக ரூ.35 லட்சத்துக்கான காசோலையை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, துணை தலைவர் இசையமைப்பாளர் தீனா, ஆர்.மோகன மகேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இது குறித்து செய்தியாளரிடம் தெரிவித்த ஆர்.கே.செல்வமணி, ‘பையனூரில் கட்டப்பட்டு வரும் திரைப்பட நகரில் இரண்டு ஸ்டூடியோக்கள் தற்போது தயார் நிலையில் உள்ளது. அவற்றை விரைவில் திறப்பதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதற்கு போக்குவரத்து வசதிக்காக சாலை அமைக்கும் பணியில் ‘நமக்கு நாமே திட்டத்தின்’ கீழ் நடைபெறும் பணிக்காக ரூ.35 லட்சம் காசோலை தற்போது வழங்கியுள்ளோம். கலைஞர் திரைப்பட நகர் என்று பெயர் சூட்டப்பட்டு, அங்கு கலைஞரின் உருவ சிலையை அமைத்து திறக்க உள்ளோம். அங்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார். என்றார்.

The post பையனூர் திரைப்பட நகரில் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி : திரைப்பட தொழிலாளர் சங்கம் வழங்கியது appeared first on Dinakaran.

Related Stories: