‘நான் சரணடைய ரேவந்த் ரெட்டி வரணும்’ போலீசை அலைக்கழித்து ஏரியில் குதித்து தப்பிய திருடன்: ஐதராபாத்தில் 7 மணிநேரம் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சூராராம் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர் பீரோவில் பணத்தை திருடிக்கொண்டு எண்ணிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டின் உரிமையாளரின் மகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாரோ இருப்பதை கவனித்து பக்கத்து வீட்டாருக்கு கூறி அழைத்து வந்தார். அதற்குள் திருடன் அங்கிருந்து தப்பித்து ஓடினான். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். அப்போது அந்த திருடன் அருகில் இருந்த ஏரியில் குதித்து அக்கரைக்கு செல்ல முயன்றான்.பொதுமக்கள் முற்றுகையிட்டதால் திருடன் ஏரியின் மத்தியில் இருந்த மண் திட்டில் ஏறி நின்று கொண்டு வெளியே வர மறுத்தான்.

அங்கு விரைந்து வந்த போலீசார், ‘உன்னை யாரும் ஒன்றும் செய்ய மாட்டோம், கரைக்கு வந்துவிடு. இருள் சூழ ஆரம்பித்துவிட்டது’ என கூறி எச்சரித்தனர். ஆனால் திருடன், ‘என்னை அடிப்பீர்கள். நான் வர மாட்டேன். நான் வர வேண்டுமென்றால் முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதல்வர் கேசிஆர், ஊடகத்தினர் வர வேண்டும். அப்போதுதான் சரண் அடைவேன்’ என தெரிவித்தான். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கரையில் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திருடன் ஏரியில் குதித்து இருளில் நீந்தி தப்பிச்சென்றான். தொடர்ந்து போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து, திருடனை தேடி வருகின்றனர்.

The post ‘நான் சரணடைய ரேவந்த் ரெட்டி வரணும்’ போலீசை அலைக்கழித்து ஏரியில் குதித்து தப்பிய திருடன்: ஐதராபாத்தில் 7 மணிநேரம் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: