நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

டெல்லி: நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வில்சன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திமுக கொறடா வில்சன்; நீட் தேர்வு மோசடியால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் நீட் தேர்வுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டது.

தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசும் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். நீட் விலக்கு சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நிதி ஒதுக்கூட்டில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.31,600 கோடி வழங்க வேண்டும்; ஆனால் இதுவரை வழங்கவில்லை. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். புயல் மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.37 ஆயிரம் கோடி கோரிய நிலையில், இதுவரை ரூ.267 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக உடனடியாக ரூ.3,000 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: