காஞ்சிபுரம் மாவட்டத்தில் திட்டமிடல் குழு உறுப்பினர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடல் குழு உறுப்பினர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆர்த்தி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா பெற்றுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலானது வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களின் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

அதனை, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர். இதில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையில் உள்ள உள்ளாட்சிகளின் உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மீது திருத்தங்கள் இருந்தால் இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 4.5.2023 அன்று வெளியிடப்படும். மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்ட ஊராட்சியில் 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சியின் 51 வார்டு உறுப்பினர்கள், 2 நகராட்சிகளின் 57 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 3 பேரூராட்சிகளின் 48 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 167 உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்காளர்களாக உள்ளனர்.

மேலும், மாவட்ட திட்டமிடல் குழுவிற்கு, மாவட்ட ஊராட்சியிலிருந்து 8 உறுப்பினர்களும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றிலிருந்து 4 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு பிறகு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக தரைத்தளத்தில் 1, 2, 5 மற்றும் 6 அறைகளில் நடைபெறும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் திட்டமிடல் குழு உறுப்பினர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: