10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை வருடத்திற்கு 2 முறை எழுத வேண்டுமென்பது கட்டாயமில்லை: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை வருடத்திற்கு 2 முறை எழுத வேண்டுமென்பது கட்டாயமில்லை என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை வருடத்திற்கு 2 முறை எழுதலாம்.இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டியில், “பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வை போன்று, 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வை வருடத்திற்கு 2 முறை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுத போதிய நேரம் மற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டை இழந்து விட்டதாகவும், இன்னொரு வாய்ப்பு கிடைத்திருந்தால் இதை விட மிக சிறப்பாக எழுத முடிந்திருக்குமே என்று மாணவர்கள் அடிக்கடி மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். மாணவர்களின் இந்த மன அழுத்தத்தை குறைக்கவே வருடத்திற்கு 2 முறை தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எந்தவொரு மாணவரும் நன்றாக தயாரித்து தேர்வு எழுதி முதல் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மறுதேர்வு எழுத வேண்டாம் என்று விரும்பினால் அவர்கள் 2வது முறை தேர்வு எழுத வேண்டியதில்லை. இது முற்றிலும் அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது, கட்டாயமில்லை. வகுப்புகள் நடத்தாமல் தேர்ச்சி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கும் டம்மி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார். மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு நிபுணர்கள் யாருமில்லை. இது போன்று வேறுபாடுகள் இருப்பதால் அந்த தேவையின் அடிப்படையில் மத்திய கல்வி ஆலோசனை வாரியம் மாற்றி அமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது,” என்று தெரிவித்தார்.

The post 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை வருடத்திற்கு 2 முறை எழுத வேண்டுமென்பது கட்டாயமில்லை: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: