தேர்தல் தோல்வி எதிரொலி பாஜ அமைச்சர் ராஜினாமா

ஜெய்ப்பூர்: மக்களவை தேர்தலில் பாஜ கட்சி தோல்வி அடைந்ததால் மாநில வேளாண் துறை அமைச்சர் கிரோரிலால் மீனா நேற்று ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் தவுசா,பரத்பூர், கரவுலி,டோல்பூர்,ஆல்வர்,டோங்க் சவாய் மதோப்பூர்,கோட்டா-பண்டி ஆகிய 7 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக மாநில அமைச்சர் கிரோரிலால் மீனா இருந்தார்.

தனக்கு பொறுப்பு வழங்கப்பட்ட தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் பாஜ தோற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பிரசாரத்தின் போது கிரோரிலால் கூறியிருந்தார்.கடந்த மாதம் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. கிரோரி லால் பொறுப்பாளராக இருந்த 7 தொகுதிகளில் 4-ல் பாஜ தோல்வி அடைந்தது. கிரோரி லாலின் சொந்த தொகுதியான தவுசாவிலும் பாஜ படுதோல்வியடைந்தது. மாநிலத்தில் மொத்தம் 25 தொகுதிகளில் பாஜ 14 தொகுதிகளை தான் கைப்பற்றியது.

இதையடுத்து கிரோரி லால் தன்னுடைய அலுவலகத்துக்கு வராமல் இருந்தார். இந்நிலையில் கிரோரிலால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக 10 நாட்களுக்கு முன்னரே முதல்வர் பஜன்லால் சர்மாவிடம் அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டார் என்று கிரோரிலாலின் உதவியாளர் தெரிவித்தார்.

The post தேர்தல் தோல்வி எதிரொலி பாஜ அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: