ஹத்ராஸ் நெரிசல் வழக்கில் 6 பேர் கைது பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ஹத்ராஸ்: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலியான அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உபி மாநிலம் ஹத்ராசில் கடந்த 2ம் தேதி சாமியார் போலே பாபாவின் சொற்பொழிவு கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டு 121 பேர் பலியானார்கள். 31 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் 21 உடல்கள் ஆக்ராவுக்கும், 28 உடல்கள் எட்டாவுக்கும், 34 உடல்கள் ஹத்ராசுக்கும், 38 உடல்கள் அலிகாருக்கும் கொண்டு செல்லப்பட்டன.

தற்போது அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று முன்தினம் வரை அடையாளம் காணப்படாத மூன்று உடல்களில், 2 உடல்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவிலும், நேற்று ஒரு உடலும் அடையாளம் காணப்பட்டு அலிகார் மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டு சென்றனர். இந்த தகவலை ஹத்ராஸ் கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘தற்போது சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு யாரும் காணாமல் போனதாக எந்த புகாரும் இல்லை. இருப்பினும்சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்றவர்களின் எண்ணிக்கையை கணக்கிட மாவட்ட நிர்வாக அதிகாரிகளை நாங்கள் நியமித்துள்ளோம். ஹத்ராஸ் நெரிசல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ளது. கூட்ட நெரிசலுக்குப் பின்னால் சதி இருந்ததா என்பது குறித்து விசாரித்து இந்தக் குழு இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்’ என்றார்.

இதற்கிடையே ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் தொடர்புடைய 2 பெண்கள் உட்பட 6 பேரை நேற்று உபி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தேவபிரகாஷ் மதுகர் தலைமறைவாக உள்ளார். அவரைப்பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். கைது செய்யப்பட்ட 6 பேரும் தன்னார்வலர்களாக பணிபுரிந்தவர்கள் என்று அலிகார் போலீஸ் ஐஜி ஷலப் மாத்தூர் தெரிவித்தார்.

* போலே பாபா எங்கே?
ஹத்ராஸ் நெரிசலுக்கு பின்னர் சாமியார் போலே பாபாவை ஆசிரமத்தில் காணமுடியவில்லை. அவர் அங்கு இல்லை. தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு மெயின்புரி போலீசார் ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு பெண்கள் உட்பட 50 முதல் 60 தன்னார்வலர்கள் மட்டுமே இருந்தனர். இதுபற்றி மெயின்புரி கூடுதல் எஸ்பி ராகுல் மிதாஸ் கூறுகையில், ‘சாமியாரை அவரது ஆசிரமத்தில் காணவில்லை. இருப்பினும் நாங்கள் விசாரணைக்காக செல்லவில்லை. பாதுகாப்பை சரிபார்க்க சென்றோம்’ என்றார்.

* போலே பாபா மீது எப்ஐஆர் பதியாதது ஏன்?
ஹத்ராஸ் நெரிசல் தொடர்பாக சொற்பொழிவு கூட்டத்தை நடத்திய சாமியார் சூரஜ்பால் என்ற நாராயண் சாகர் ஹரி என்கிற போலே பாபா மீது இப்போது வரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இதுபற்றி அலிகார் ஐஜி ஷலப் மாத்தூர் கூறுகையில்,’ நெரிசல் தொடர்பான விசாரணையின் போது தேவைப்பட்டால் போலே பாபா விசாரிக்கப்படுவார்’ என்றார். நெரிசல் தொடர்பாக சிக்கந்த்ரா ராவ் காவல் நிலையத்தில் 2ம் தேதி பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரிலும் சாமியார் போலே பாபா குற்றம் சாட்டப்படவில்லை.

உபிமுதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், சாமியார் ஏன் குற்றம் சாட்டப்பட்டவராக எப்ஐஆரில் குறிப்பிடப்படவில்லை என்று கேட்டதற்கு,’ சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்கள் மீது முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணமானாலும் அதன் வரம்புக்குள் வருவார்கள்’ என்றார்.

* இன்று ஹத்ராஸ் செல்கிறார் ராகுல்
ஹத்ராஸ் கூட்ட நெரிசல் நடந்த இடத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். அவருடன் முக்கிய தலைவர்கள், எம்பிக்கள் அங்கு செல்ல உள்ளனர் என்று அவர் கூறினார்.

The post ஹத்ராஸ் நெரிசல் வழக்கில் 6 பேர் கைது பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: