அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுதலை மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிர்வாக தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில் நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணபரிவர்த்தனை குற்றச்சாட்டில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன்னதாக சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கடந்த 28ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டமன்ற குழு தலைவராக ஹேமந்த் சோரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஹேமந்த் சோரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் நேரில் வழங்கி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரியது.

இதனை தொடர்ந்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஹேமந்த் சோரனுக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.  இது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரி கூறுகையில், ‘‘மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு தேதி மற்றும் நேரமும் கேட்கப்பட்டுள்ளது” என்றார். இதனிடையே வரும் 7ம் தேதி ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்பதாக ஜேஎம்எம் கட்சி தெரிவித்திருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக ஹேமந்த் சோரன் நேற்றே முதல்வராக பதவியேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில் சோரனின் தந்தை ஷிபு சோரன், தாயார் ரூபி சோரன், மனைவி கல்பனா மற்றும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சம்பாய் சோரனும் பதவியேற்பில் பங்கேற்றார்.

* உண்மை வெற்றி பெறும்
முதல்வராக பதவியேற்ற பின் ஹேமந்த் சோரன் பொதுமக்களுக்கு வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘‘2019ம் ஆண்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு பழங்குடியின இளைஞன் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டுவதை சதிகாரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கடைசியாக பொய் வழக்குகளினால் நான் நீக்கப்பட்டேன். கடவுளின் திட்டங்களில் தாமதம் ஏற்படலாம். ஆனால் இறுதியில் உண்மை வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுதலை மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன் appeared first on Dinakaran.

Related Stories: