மக்களவை தேர்தலில் வென்றவர்கள் 50.58% வாக்குகள் பெற்றுள்ளனர்: 2019 தேர்தலை விட 2% குறைவு, ஏடிஆர், தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கை

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 50.58% வாக்குகளை பெற்றுள்ளனர். இது கடந்த பொதுத்தேர்தலை விட 2% குறைவு என தகவல் வௌியாகி உள்ளது. 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 240 இடங்களை வென்ற பாஜ கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 99 இடங்களில் வென்ற காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை இணைந்து மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் (குஜராத் சூரத் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு) வாக்குப்பதிவு சதவீதங்களை ஆய்வு செய்து அறிக்கை வௌியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், “2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மொத்த வாக்குகளில் 50.58 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர்.

இது கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பதிவான 52.65 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் குறைவு. அவர்களில் வெற்றி பெற்ற 279 வேட்பாளர்கள்(51% பேர்) தங்கள் தொகுதிகளில் மொத்த வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்றுள்ளனர். அதேசமயம் 263 வேட்பாளர்கள்(49% பேர்) பாதியளவு வாக்குகள் கூட பெறவில்லை. தேசிய கட்சிகளில் பாஜவின் 239 வெற்றி வேட்பாளர்களில் 75 பேர்(31%) 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 99 வேட்பாளர்களில் 57 பேர்(58%) 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர். இதேபோல் மாநில கட்சிகளில் சமாஜ்வாடியின் 37 வெற்றியாளர்களில் 32 பேரும்(86%), திரிணாமுல் காங்கிரசின் 29 வெற்றி வேட்பாளர்களில் 21 பேரும்(72%), திமுகவின் 22 வெற்றியாளர்களில் 14 பேரும்(64%) 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

கிரிமினல் வழக்குகளுடன் வெற்றி பெற்ற 251 பேரில் 106 பேர்(42%) 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை வென்றுள்ளனர். அதேசமயம் எந்தவொரு வழக்கும் இல்லாத 291 வெற்றி வேட்பாளர்களில் 173 பேர்(59%) 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்னர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் வென்றவர்கள் 50.58% வாக்குகள் பெற்றுள்ளனர்: 2019 தேர்தலை விட 2% குறைவு, ஏடிஆர், தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: