வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் நடக்காது சொந்த வீடு கனவு காணும் உரிமையை இழந்த ஏழைகள்: ராகுல் காந்தி வேதனை

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட் சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாட்ஸ் அப் சேனலில் பகிர்ந்து எழுதிய பதிவில் கூறியிருப்பதாவது:
மும்பையில் சொந்த வீடு வாங்க இந்தியாவின் 5 சதவீத பணக்காரர்கள் கூட 109 ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும். பெரும்பாலான பெரிய நகரங்களின் நிலை இதுதான். அங்கு நீங்கள் வாய்ப்புகள் மற்றும் வெற்றியை தேடி கடினமாக உழைக்கிறீர்கள். ஆனால் 109 ஆண்டு சேமிப்பு எப்படி சாத்தியமாகும்? ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பரம்பரை சொத்து என்பது செல்வம் அல்ல. குழந்தைகளின் படிப்பு செலவு, கவலைதரும் மருத்துவ சிகிச்சை செலவு, பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு, குடும்பத்திற்கென சிறிய கார் வாங்குவது இப்படிப்பட்ட பொறுப்புகள் மட்டுமே அவர்களின் பரம்பரை சொத்து. இருந்தாலும், அவர்களின் மனதில் ஒரு கனவு இருக்கிறது. நாமும் ‘ஒருநாள்’ சொந்த வீடு வாங்குவோம் என்ற கனவுதான் அது.

ஆனால் அந்த ‘ஒருநாள்’ எப்போது வரும்? பணக்காரர்களுக்கே 109 ஆண்டு ஆகும் நிலையில், ஏழைகள் சொந்த வீடு கனவு காணும் உரிமையை கூட இழந்து விட்டனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுற்றிலும் நான்கு சுவர்கள், தலைக்கு மேல் ஒரு கூரை அத்தியாவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பை கொடுத்து சேமிப்பதை விட அதிகமாக தேவைப்படுகிறது. அடுத்த முறை யாராவது மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை உங்களிடம் கூறினால், உங்கள் வீட்டு பட்ஜெட் பற்றிய உண்மையை அவர்களுக்கு காட்டுங்கள். இந்த பொருளாதாரம் யாருக்கானது? என கேளுங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.

 

The post வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் நடக்காது சொந்த வீடு கனவு காணும் உரிமையை இழந்த ஏழைகள்: ராகுல் காந்தி வேதனை appeared first on Dinakaran.

Related Stories: