பெரியகுளத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், தெருக்களில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போதும், நடந்து செல்லும் போதும் சற்று அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் திடீரென சண்டை போட்டு அந்த வழியாக செல்வோரை பீதிக்கு உள்ளாக்குகின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவசரத்தில் பிரேக் பிடித்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மேலும் இரவில் தனியாக செல்லும் நபர்களை நாய்கள் துரத்திச் சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் இரவில் வெளியே சென்றுவர பொதுமக்கள் தயக்கம் காட்டும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் தெருக்களில் திரியும் நாய்களை பிடித்துச்சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், மீண்டும் சமீபகாலமாக பெரியகுளத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியகுளத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: