நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024 வெளியீடு: அரசு தகவல்


சென்னை: புதிய நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எரிசக்தித்துறை செயலர் (பொறுப்பு) பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: பட்ஜெட் அறிவிப்பில் நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும். புதிய நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர் வரைவு கொள்கையை தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இந்த வரைவு கொள்கையை பரிசீலித்த அரசு தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவது சவாலான ஒன்று. சூரிய சக்தியை பொருத்தவரை பகலில் உச்சத்தை அடைகிறது, அதே நேரத்தில் காற்றாலை மின்சாரம் பெரும்பாலும் இரவில் வலுவாக இருக்கும். நீரேற்று மின் நிலையங்களை பொருத்தவரை தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை செய்ய முடியும். மின் தேவை குறையும் போது உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான ஆற்றலைச் சேமித்து, உச்ச தேவை இருக்கும் போது பயன்படுத்த முடியும். இது பசுமை ஆற்றலின் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு இல்லாமல், அனல், எரிவாயு போன்ற மரபுசார் ஆதாரங்களின் பயன்பாட்டை குறைக்கும். இந்த கொள்கையானது, ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடையவும், புதுபிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.

மேலும் நீரேற்று மின் திட்டங்களை ஊக்குவிக்க இடங்களை கண்டறிந்து, சரியான இடத்தில் திட்டங்கள் செய்வதை உறுதி செய்யும். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் இடங்களை அடையாளம் காண்பதிலும், அங்கே திட்டத்தை செயல்படுத்துவதை எளிமைபடுத்தும். மேலும் பொதுத்துறையும், தனியார் பங்களிப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவது, இரண்டு துறைகளுக்கும் வலிமைப்படுத்துவதோடு, சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனை சேர்ந்து சமாளிக்க உதவும். இந்த கொள்கையை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் செயல்படுத்தும். இந்த கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அதன் பிறகு அது மதிப்பாய்வு செய்யப்படும். இந்த குறிப்பிட்ட காலத்தில் நிறுவப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட நீரேற்று மின் திட்டங்கள், இந்த கொள்கையின் கீழ் அறிவிக்கப்பட்ட நன்மைகள் மற்றும் ஊக்கத்தொகைகளுக்குத் தகுதிபெறும்.

The post நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024 வெளியீடு: அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: