எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 14 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்று மாலை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் மகாதேவன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரதீப், ரஞ்சித், பிரபாகரன், அஜித் ஆகிய 4 பேரும், செந்தில்குமாரின் விசைப்படகில் விஷ்வா, ஆனந்தராஜ், ஆனந்தபாபு, குபேந்திரன், சேகர் ஆகிய 5 பேரும், மணிகண்டனின் விசைப்படகில் மணிகண்டன், முத்துக்குமார், செல்லத்தம்பி, செல்வம், சுரேஷ் ஆகிய 5 பேரும் என 14 பேர் நெடுந்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 14 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இலங்கை காங்கேசன்துறைமுகத்திற்கு அவர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: