நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ‘தாமரை’ சின்னம் பொறித்த சீருடை: பாஜவின் அற்பத்தனம் என காங். கடும் கண்டனம்

புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ‘தாமரை’ சின்னம் பொறித்த சீருடை வழங்கப்பட்டது பாஜவின் அற்பத்தனம் என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. நாடாளுமன்ற பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை பணியில் ஈடுபடும் ஆண் பணியாளர்களுக்கு இதற்குமுன் சஃபாரி சூட் போன்ற ஆடைகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அவை அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் மேல் சட்டையும், கோர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மேல் சட்டையில் பாஜவின் சின்னமான தாமரை இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஜி20 நாடுகளின் இந்திய தலைமைக்காக வடிவமைக்கப்பட்ட சின்னத்தில் பாஜவின் சின்னமான தாமரை இடம்பெற்றிருந்ததது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாடாளுமன்ற பணியாளர்களுக்கான சீருடையில் தாமரை இடம்பெற்றிருப்பது சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தன் ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்ற பணியாளர்களின் புதிய சீருடையில் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில் சேர்க்கப்படாதது ஏன்? அவைகளுக்கு அந்த தகுதி இல்லையா? ஓ.. அவை பாஜவின் சின்னம் இல்லையே அதனால் தான் அவை இடம்பெறவில்லையா ஓம் பிர்லா அவர்களே.. நாடாளுமன்றத்தை ஒருதலைபட்ச கட்சி சார்ந்ததாக மாற்ற பாஜ முயற்சிக்கிறது. ஏற்கனவே ஜி20 உச்சி மாநாட்டில் அவர்கள் அதை செய்தார்கள். நாடாளுமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானது. மேலானது. தற்போது அது ஒரு கட்சியின் சின்னமாக மாறி வருகிறது. இந்த அற்பத்தனம் ஏற்கத்தக்கதல்ல” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ‘தாமரை’ சின்னம் பொறித்த சீருடை: பாஜவின் அற்பத்தனம் என காங். கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: