2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த முன்னோடிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,600 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகளை வழங்கி பேசியதாவது:
ரத்தம் சிந்தி உழைத்த மூத்த முன்னோடிகளான தாத்தா, பாட்டி ஆகியோருக்கு ஒரு பேரனாக என் கடமையை செய்வதாக கருதுகிறேன். டிசம்பர் 17ல் சேலம் இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மூத்த முன்னோடிகள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் மதுரையில் அதிமுகவினர் மாநில மாநாடு நடத்தினர். ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதை மதுரையில் நடத்திக் காட்டினர்.

சேலத்தில் நடைபெறும் மாநாடு என்பது, ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்பதை நடத்தி காட்ட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் தேர்தலில் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினீர்கள். வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இந்தியா என்ற ஒரு நாடு இருக்க வேண்டும் எனில், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜ அரசை மக்கள் வீழ்த்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

The post 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: