கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலைவர்கள் நேரில் ஆறுதல்

பாரபட்சம் இன்றி நடவடிக்கை: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வர்களின் குடும்பத்துக்கு ரூ.10,000 நிவாரண உதவி வழங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ஆறுதல் கூறினார். ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று அவர்களுடன் உட்கார்ந்து நடந்த சம்பவத்தை கேட்டு அறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எல்லோரும் ஒருமித்த கருத்தாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கூறுகின்றனர். இதனை நீங்கள் முதல்வரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பெரும் துயரத்துக்கு பின்னால் இருக்கும் மெத்தனால் மாபியா கும்பலை கைது செய்ய வேண்டும். கருணாபுரம் கள்ளச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியின் தொடர்பு இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

சிபிஐ விசாரணை தேவை; அன்புமணி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினரை பாமக தலைவர் அன்புமணி எம்பி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘விஷசாராயத்துக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளை தண்டிக்கவில்லை. எஸ்பி மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கலெக்டர் ஏன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

கலெக்டர் ஆரம்பத்தில் உண்மையை மறைத்ததால்தான் இவ்வளவு பேர் உயிரிழப்புக்கு காரணம். சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை தேவை. தற்போது பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும், கள்ளக்குறிச்சி விஷசாராய உயிரிழப்பை கண்டித்தும் பாமக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளது. இதற்கான தேதியை ஓரிரு நாளில் அறிவிப்போம்’ என்றார்.

அதிகாரிகளுக்கு தண்டனை: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருணாபுரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் சாராய விற்பனை நடந்து வருகிறது. உள்ளூர் போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் கூட்டணி போட்டு மாமூல் வாங்கிக்கொண்டு அவர்களை சுதந்திரமாக விற்க அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்கள்மீது வழக்கு போட்டு, கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாராயத்தையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

சுட்டுத்தள்ளுங்க…: புகழேந்தி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக உரிமை மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘சாராயம் காய்ச்சி விற்பவர்களை சுட்டுத்தள்ள முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முதலமைச்சருக்கும், உள்துறை செயலாளருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது. கோர்ட் கேஸ் எல்லாம் சரி வராது. தற்போது மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. மெத்தனால் கலந்த சாராயம் ஓரிடத்தில் மட்டும் விற்பனை செய்யவில்லை. பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

The post கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலைவர்கள் நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: