விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு: மதி தாய் உட்பட 64 பேர் மனு தாக்கல்

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவையொட்டி அத்தொகுதியில் வருகிற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கடந்த 19ம்தேதியன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி ஆகியோர் விக்கரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரிடம் மனுதாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா மனுதாக்கல் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று ஒரே நாளில் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதில் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி மதியின் தாயார் செல்வி நேற்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஆறுமுகம் என்பவர் கையில் தாலியுடன் வெள்ளை புடவை அணிந்து விதவை கோலத்தில் மனு தாக்கல் செய்தார். பிரதான கட்சிகளான திமுக, பாமக, நாதக வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 24ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற 26ம் தேதி கடைசிநாளாகும்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு: மதி தாய் உட்பட 64 பேர் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: