தி.நகர், திருவான்மியூர், ஆவடி பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தி.நகர் திருவான்மியூர், ஆவடி பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள சென்னையில் ரூ.30 கோடியில் 3 பன்னோக்கு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று வீட்டுவசதி- நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள், அதிவேக இணையம், போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பகிர்ந்த பணியிட வசதிகளைக் கொண்ட மையங்களாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும்.

சென்னைப் பெருநகர் பகுதியில் கைவண்ணம் சதுக்கம் (சென்னை அங்காடி) ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னைப் பெருநகர் பகுதியில், வெள்ள நிகழ்வுகளின் போது அவசரகால நடவடிக்கையை மேம்படுத்துவதற்கும், வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும், வெள்ளக் கட்டுப்பாடு வரைபடம் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் தயாரிக்கப்படும். மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அண்ணா சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் நகர மறுசீரமைப்பு செய்து தன்னிறைவுப் பகுதிகளாக உருவாக்க உள்ளூர் பகுதி திட்டம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பல்வேறு கட்டங்களாகத் தயாரிக்கப்படும். சென்னைப் பெருநகர் பகுதிக்கு நகர்ப்புற வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீர் வடிகால் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னைப் பெருநகர் பகுதியில் அதிவேக இணையம், போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பகிர்ந்த பணியிடங்கள் முதலிய வசதிகளைக் கொண்ட முழுவதும் குளிரூட்டப்பட்ட மூன்று பன்னோக்கு மையங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னைப் பெருநகர் பகுதியில் அமைத்துள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னைப் பெருநகர் பகுதியில் அமைத்துள்ள 10 சுரங்கப்பாதைகள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய போக்குவரத்து சமிக்ஞைகள் சூரிய சக்தியில் இயங்கும் வகையிலும், சாலை சந்திப்புகள் மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும். தி.நகர் பேருந்து நிலையம், போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கான ஓய்வறை, கழிப்பறை, கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்தம் மற்றும் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். திருவான்மியூர் பேருந்து நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். நெமிலிச்சேரியில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புத்தேரி ஏரியில் மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதாக வடிவதற்கும், உபரி நீர் சேமிப்பை அதிகரிக்கவும் பணிகள் மேற்கொள்வதுடன், நடைபாதை, இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டுத் தளம் மற்றும் மின் விளக்குகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கத்தில், உணவருந்தும் இடம் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய பன்னோக்கு மையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஆவடி பேருந்து நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். போரூர் ஏரியில், மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதில் வடிவதற்கும், உபரிநீர் சேமிப்பை அதிகரிக்கவும், பணிகள் மேற்கொள்வதுடன் ஏரியின் நீர்முனை, நடைபாதை, இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டுத் தளம் மற்றும் விளக்குகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெருங்குடி ஏரியில், மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதில் வடிவதற்கும், உபரிநீர் சேமிப்பை அதிகரிக்கவும், பணிகள் மேற்கொள்வதுடன் ஏரியின் நீர்முனை, நடைபாதை, இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டுத் தளம் மற்றும் விளக்குகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தி.நகர், திருவான்மியூர், ஆவடி பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: