200 பெண் ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ : சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை: பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாக 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் மூலமாக பிங்க் ஆட்டோ இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலன் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும் பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ. 2 கோடி செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை (பிங்க் ஆட்டோ) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். சமூக நலத் துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000த்தில் இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்படும்.

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50,000 விதம் 1 கோடி ரூபாய் மானியம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றும் மகளிர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும். தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ. 1 கோடி செலவில் மறு சீரமைக்கப்படும். 6 அரசு சேவை இல்லங்கள் மற்றும் 27 அன்னை சத்யா குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு ரூ. 1 கோடி செலவில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களில் உள்ள 12,567 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகள் திருமண தடைச்சட்டம் 2006 தொடர்பாக விழிப்புணர்வு பலகை ரூ.62.83 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ. 9 கோடி செலவீனத்தில் முட்டை உரிப்பதற்கான இயந்திரம் வழங்கப்படும். ஆதரவற்ற முதியூர் நலனுக்காக 7 சுற்றுலா தலங்களில் உள்ள முதியோர் இல்லங்களில் சிறப்பு தங்கும் வசதிகள் ரூ.40 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உணவு முறைகளை கண்காணிக்க ரூ.34.50 கோடி செலவினத்தில் 29,236 அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பழைய திறன் கைபேசிகளுக்கு பதிலாக புதிய திறன் கைபேசிகள் வழங்கப்படும். திருச்சி அரசினர் கூர்நோக்கு உள்ளத்திற்கு இல்ல சிறார்கள் தங்குமிடம் தொழில் பயிற்சி கூடம், ஆற்றுபடுதுநர் அறை , நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் குடியிருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கட்டிடங்கள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

சென்னை, சேலம், கடலூர், நெல்லை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 அரசு கூர் நோக்கு இல்ல கட்டிடங்களில் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் 2.50 கோடியில் மேற்கொள்ளப்படும். செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்திற்கு குழந்தைகளுக்கு கூடுதல் துயில் கூடங்கள் போதை தடுப்பு மையம் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளருக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை ரூ.4 கோடியில் கட்டப்படும். அரசு கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள சிறார்களை ஆக்கபூர்வமான வகையில் ஈடுபடுத்தவும் அவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் நல்வழிப்படுத்தவும் அடிப்படை பயிற்சி 2.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் அமைய உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லாத வளாகத்தில் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ரூ,6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 200 பெண் ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ : சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: