ஆயுத பூஜை விற்பனையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் முதன்மை அலுவலர் ஆய்வு

அண்ணாநகர்: ஆயுத பூஜையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அங்காடி நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தை அமைக்கப்படுவது வழக்கம். காய்கறி, பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்களை ஒரே இடத்தில் குறைந்த விலையில் பொதுமக்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த சிறப்பு சந்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு சிறப்பு சந்தை அமைத்து கொடுத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், இந்த ஆண்டு சிறப்பு சந்தை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, வியாபாரிகளின் நலன் கருதி கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்களை கடந்த 18ம் தேதியில இருந்து 27ம் தேதி வரை 10 நாட்கள் வியாபாரம் செய்து கொள்ளலாம் என அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அவர்களது கடைகளில், தார்ப்பாய்கள் அமைத்து ஆயுத பூஜை பொருட்களை வியாபாரம் செய்யலாம் எனவும், அங்காடி நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழைக்கன்று, வாழை இலை, தேங்காய், கரும்பு, பூசணிக்காய் போன்ற பொருட்கள் வியாபாரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பூஜை பொருட்கள் வியாபாரம் செய்யும் பகுதிகளை நேற்று முன்தினம் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் வியாபாரிகளிடம், கடைகள் வைத்து வியாபாரம் செய்வதற்கு போதுமான இடம் உள்ளதா என கேட்டு, வியாபாரிகளுக்கு குடிநீர் வசதி செய்ய உத்தரவிட்டார். பூஜை பொருட்கள் விற்கும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதா எனவும் ஆய்வு
செய்தார். பின்னர், ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் அங்காடி நிர்வாக அலுவலகத்தில் கேட்கலாம். உங்களுடைய கோரிக்கை, புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என தெரிவித்தார்.

The post ஆயுத பூஜை விற்பனையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் முதன்மை அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: