என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: புதுவையில் முத்தரப்பு பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக புதுச்சேரியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பணி நிரந்தரம் செய்வது அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக ரூ.50,000 வழங்குமாறு 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் என்.எல்.சி. நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து வரும் 15-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜீவா தொழிலாளர் சங்கம் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து புதுச்சேரியில் மத்திய தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. முத்தரப்பு பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் உறுதியாகி இருக்கிறது. வரும் 15-ம் தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் உறுதியானால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மின் விநியோக தட்டுப்பாடு அபாயம் உருவாகும்.

The post என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: புதுவையில் முத்தரப்பு பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை appeared first on Dinakaran.

Related Stories: