திருவள்ளூர் மாவட்ட எல்லை, குடோனில் அதிரடி ரெய்டு; மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல்: பெண்கள் உள்பட 45 பேர் கைது; 105 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செங்குன்றம் அருகே குடோனில் மெத்தனால் கலந்து பதுக்கிவைக்கப்பட்டிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக மாவட்டம் முழுவதும் பெண்கள் உள்பட 45 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு விழுப்புரம், சேலம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பக்கம் பகுதிகளில் உள்ள தனியார் கெமிக்கல்ஸ் குடோன்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு கிடங்கில் பூட்டை அறுத்து சோதனை நடத்தியதில் ரசாயன பொருட்கள் பேரல், பேரலாக இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது மெத்தனால் கலவையுடன் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக ரசாயன கலவை என்று கூறியுள்ளனர். இதையடுத்து சுமார் 1500 லிட்டர் மெத்தனால் கலவையுடன் இருந்த ரசாயனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன பொருட்களில் உள்ள மெத்தனால் வீரியம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு
வருகிறது.

இதுசம்பந்தமாக சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த கவுதம் (54), மலையனூரை சேர்ந்த பரமசிவம் (38), ராம்குமார் (40), மாதவரம் பகுதியை சேர்ந்த பென்சிலால் (42) ஆகிய 4 பேரிடம் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி அனுமந்தன் தலைமையில்,திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 4 உட்கோட்டங்களில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதன்படி, மாவட்டம் முழுவதும் கடந்த 19ம் தேதி முதல் இன்று அதிகாலை வரை நடத்திய சோதனையில், டாஸ்மாக் மது கடத்திய மற்றும் விற்பனை செய்த 105 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 31 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1519 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்திவந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த 4 பெண் உட்பட 10 பேரை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கின்றன.

 

The post திருவள்ளூர் மாவட்ட எல்லை, குடோனில் அதிரடி ரெய்டு; மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல்: பெண்கள் உள்பட 45 பேர் கைது; 105 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: