விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

சென்னை: விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு நிகராக இந்தியாவும் சாதித்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, உலகில் எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

இந்திய செயற்கை கோள்கள் மட்டும் இன்றி வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவி வருகிறது. வரும் காலத்தில் கூடுதலாக செயற்கை கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. விண்வெளிதுறையில் இந்தியா மிகவும் வெற்றிகரமான நாடாக உள்ளதால், வெளிநாடுகளும் இஸ்ரோவை நாடி வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரோ ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கடந்த 2016ம் ஆண்டில் ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் முதல் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஹெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பி சாதனை படைத்தது. இந்த நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில், புஷ்பக் என்ற ஏவுகலனை பரிசோதித்து வருகிறது. இந்த ஏவுகலன் ஏற்கெனவே இரண்டு முறை சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மூன்றாம் கட்ட சோதனை நேற்று காலை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து 4.2 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்த ஏவுகலன் வெற்றிகரமாக பூமிக்கு வந்தது. மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் தரையிறங்கிய ஏவுகலனின் வேகம் படிப்படியாக பாரசூட் மூலமாக குறைக்கப்பட்டு நிறுத்தப்படும். நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தை கொண்ட நாடாக இந்தியாவும் மாறியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஏவுகலன் தரையிறங்கும் பரிசோதனையில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வெற்றி அடைந்துள்ளது. இது ஒரு ஹாட்ரிக் வெற்றி ஆகும். இந்த சோதனை நேற்று காலை 7.10 மணிக்கு நடைபெற்று வெற்றியடைந்துள்ளது. ‘புஷ்பக்’ ஒரு துல்லியமான கிடைமட்ட தரையிறக்கத்தை செயல்படுத்தியது. சவாலான சூழ்நிலையில் மேம்பட்ட திறன்களை இந்த சோதனை காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இஸ்ரோ தனது ராக்கெட்டுகளை ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த ராக்கெட்டுகள் குறிப்பிட்ட உயரத்திற்கு சென்ற பிறகு ஒவ்வொரு பாகமாக கடலில் விழுந்துவிடும். ஆனால், தற்போதைய இந்த புஷ்பக் ஏவுகலன் சோதனை என்பது செயற்கை கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி விடும்.

இந்த ராக்கெட்டுகளை பயன்படுத்தி செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவது பொருளாதார ரீதியாகவும் இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது சோதனை முடிவு வெற்றி பெற்றுள்ளதால் இனி விண்வெளியில் இந்த ஏவுகலன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு பூமியில் பத்திரமாக தரையிறக்கப்படும். இது மிகப்பெரிய திருப்புமுனை தொழில்நுட்பம் என்றும் விண்வெளி துறையில் செலவுகள் இந்த ராக்கெட் மூலமாக கணிசமாக குறையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

The post விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: