இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ஓட்டுநர் இல்லா ரயில் தயாரிக்க ₹269 கோடியில் ஒப்பந்தம்: நிர்வாகம் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ₹269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 இன் கீழ், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ₹946 கோடியே 92 லட்சம் மதிப்பில், கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17ம் தேதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (நவ.27ம் தேதி) துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்கள் என மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை வழங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ₹269 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் ஆகியவையும் ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ஓட்டுநர் இல்லா ரயில் தயாரிக்க ₹269 கோடியில் ஒப்பந்தம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: