மயிலாடுதுறை அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சம்பவம்.. உரிமையாளர் கைது!

தரங்கம்பாடி: மயிலாடுதுறை அருகே வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் நாட்டு வெடிகள் வெடித்து 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடியை சேர்ந்தவர் மோகன். இவர், தனது வீட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வயல் பகுதி திடலில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 2008 முதல் அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் 11 பேர் வேலை செய்கின்றனர். இங்கு திருவிழா மற்றும் இதர விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் அதிக சத்தம் எழுப்பும் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வெடி தயாரித்து வைத்திருந்த குடோனில் திடீரென பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகள் வெடித்து சிதறின.

அப்போது, அருகில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (23), மூவலூர் கிராமத்தை சேர்ந்த மதன் (22), ராகவன் (23), நிகேஷ் (22) ஆகிய 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். 4 பேர் பலத்த காயமடைந்தனர். சத்தம் கேட்டு கிராம மக்கள் வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து மயிலாடுதுறை டிஆர்ஓ மணிமேகலை, ஆர்டிஓ அர்ச்சனா, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஹர்ஷ்சிங் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், விபத்து குறித்து பொறையார் போலீசார் தொழிற்சாலை உரிமையாளர் மோகனை கைது செய்தனர். அவர் மீது இந்திய குறியீடு வெடி பொருள் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post மயிலாடுதுறை அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சம்பவம்.. உரிமையாளர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: