மஞ்சூர்-கோவை சாலையில் நள்ளிரவில் அரசு பஸ்சை வழிமறித்த யானைகள்

*4 மணி நேரம் பயணிகள் தவிப்பு

மஞ்சூர் : மஞ்சூர்-கோவை சாலையில் சென்ற அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகளால் நள்ளிரவு நேரத்தில் நடுக்காட்டில் பயணிகள் தவித்தனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றன. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தன.

இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளன. கடந்த சில தினங்களாக 3 குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் நடமாடி வருகின்றன. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காந்திநகரில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் மஞ்சூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் ஊட்டியில் இருந்து கெத்தைக்கு சென்ற அரசு பஸ்சும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கியதால் இரவு 8 மணிக்கு மஞ்சூர் சென்றடைய வேண்டிய அரசு பஸ் சுமார் 9 மணிக்கு மஞ்சூரை சென்றடைந்தது. தொடர்ந்து மஞ்சூர் பயணிகளை இறக்கிவிட்டபின் மீண்டும் பயணிகளுடன் கெத்தைக்கு புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் 20வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது குட்டிகளுடன் வழியை மறித்தபடி நடுரோட்டில் காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இதை கண்ட டிரைவர் ராஜ்குமார் ஓசை ஏதும் எழுப்பாமல் பஸ்சை சற்று தொலைவிலேயே ஓரங்கட்டி நிறுத்தினார். நீண்ட நேரம் சாலையோரத்தில் குட்டிகளுடன் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த யானைகளில் ஒன்று திடீரென பஸ்சை நோக்கி வந்தது. இதை கண்டவுடன் சுதாரித்த டிரைவர் ராஜ்குமார் அரசு பஸ்சை மெதுவாக பின்னோக்கி செலுத்தினார். பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் கடும் பீதியில் அமைதி காத்தனர். இதைத்தொடர்ந்து யானை மீண்டும் தனது கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது.

சுமார் 3 மணி நேரம் சாலையில் இருந்து விலகாமல் வழியை மறித்தபடி நின்ற காட்டு யானைகள் மெதுவாக நகர்ந்து சென்று சாலையோரத்தில் இறங்கி வனத்திற்குள் சென்றது. யானைகள் காட்டுக்குள் சென்றதை உறுதிபடுத்திய பிறகே அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு கெத்தைக்கு சென்றது. வழக்கமாக இரவு 9 மணிக்கு கெத்தைக்கு செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதாலும் மற்றும் காட்டு யானைகளின் வழிமறிப்பு காரணமாகவும் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சென்றடைந்தது. பஸ்சில் சென்ற பயணிகள் சுமார் 4 மணி நேரம் நடுக்காட்டில் தவிப்பிற்குள்ளாகினர்.

The post மஞ்சூர்-கோவை சாலையில் நள்ளிரவில் அரசு பஸ்சை வழிமறித்த யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: