மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது: சிபிஐ

மணிப்பூர்: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த கலவரத்தில் இதுவரை சுமார் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை மணிப்பூருக்கு வெளியே மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் மணிப்பூரில் பாதுகாப்பிற்காக சுமார் 35 ஆயிரம் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவித்துள்ளதாகவும், இதுவரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் ஆகியோருக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்ற தகவலையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அவைக்கு வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்த வாரம் விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது: சிபிஐ appeared first on Dinakaran.

Related Stories: