கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை துணை ஆணையர் ஆய்வு

பெரம்பூர்: சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முழுவதுமாக முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சியின் வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று பார்வையிட்டார்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஆர்பி காலனி, பல்லவன் சாலை, ஜம்புலிங்கம் மெயின் தெரு, காவிரி நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, எந்த அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, முடிக்கப்பட்ட பணிகளின் தரம் எப்படி உள்ளது, இன்னும் எவ்வளவு பணிகள் மீதம் உள்ளன என்பதை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள், பருவமழை தொடங்கும் முன்பு அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாட். இந்த ஆய்வின் போது திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற் பொறியாளர்கள் ரவிவர்மன், பாபு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை துணை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: