தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

சென்னை, ஜூலை 6: உலகச்சந்தையில், தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருட்களின் பங்கு உயர வாய்ப்புள்ளது. படித்த இளைஞர்கள் கால்நடை பண்ணைகளை அமைக்க முன்வரவேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இதுகுறித்து, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாய பெருங்குடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடிய துறையாக மட்டுமல்லாது, மக்களுக்கு சரிவிகித சத்தான பாலை உற்பத்தி செய்யும் உன்னத துறையாகவும் திகழ்கிறது.

தமிழ்நாடு பொருளாதாரத்தில், சேவைத்துறை 45 சதவீதம், தொழில் துறை 34 சதவீதம், விவசாயம் 21 சதவீதம் பங்களிக்கின்றன மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8 சதவீதமும் பங்களிக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 25 சதவீத பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு 4.47 சதவீதம். தமிழ்நாடு, நாட்டின் 11வது பெரிய பால் உற்பத்தியாளராகவும், ஆவின் 5வது பெரிய பால் கூட்டுறவு உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.

பால் உற்பத்தியில் தற்போது இந்தியா, தன்னிறைவடைந்து உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகப்பெரிய பங்காற்றுகிறது. இந்திய பால்பண்ணை தொழில் தேசியப் பொருளாதாரத்திற்கு 5 சதவீத பங்களிப்பதோடு, 8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கிறது. 2023ல் 231 மில்லியன் டன்னாக இருக்கும் பால் உற்பத்தி, 2030ல் 300 மில்லியனாக உயர வாய்ப்புள்ளது. உலகளவில், பால் பொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக மட்டுமல்லாமல் நுகர்வோராகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது உலகின் மொத்த பால் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை இந்தியா வழங்குகிறது. மேலும் உற்பத்தியை உயர்த்திட தரமான கால்நடை தீவனங்களை அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆவின் பால் கொள்முதல் திறனை நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டராக உயர்த்தவும், கால்நடை எண்ணிக்கையைப் பெருக்க இந்த ஆண்டுக்குள் 2 லட்சம் கால்நடைகள் வாங்க மானியம் மற்றும் கடன் வசதி வழங்க முடிவு செய்து கடந்த ஓராண்டில் புதிதாக கறவை மாடுகள் வாங்க ரூ.137 கோடி கடன் வசதியும், கால்நடைப் பராமரிப்பு கடனாக 44,175 உறுப்பினர்களுக்கு ரூ.123 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 60,000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டுள்ளது. உலகச்சந்தை பால் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக கொண்டு செல்ல படித்த இளைஞர்கள், பெண்கள், தொழில் முனைவோர்கள் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு முன் வருவோர்க்கு பால்வளத்துறை உறுதுணையாக செயல்படும். பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் மானியங்களை ஒருங்கிணைத்து குறிப்பாக தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 30% அல்லது ரூ.2,25,000 இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும். மேலும், பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது ரூ.3,75,000 இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: