தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: அப்பாவி சுற்றுலாப் பயணிகளைத் தீவிரவாதிகள் தாக்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. எந்தவித தவறும் செய்யாத அப்பாவி சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தீவிரவாதத் தாக்குதல் மிகவும் கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது. எனவே இந்திய அரசு உடனடியாக தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பாடத்தை வழங்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டினுடைய எல்லையை இன்னும் பாதுகாப்புடனும் வலுவானதாகவும் மாற்றி தீவிரவாத தாக்குதல்களில் இருந்து, மக்களை காக்க வேண்டியது நமது அரசின் கடமை. இது போன்ற தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக்: இத்தகைய தாக்குதலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பாதுகாப்புப் படைகளின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது. இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான்: ஜம்முகாஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் காட்டுமிராண்டி தனமானது. இச்சம்வத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது. மேலும் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
The post காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.
