வாக்குச்சாவடிக்கு செல்ல முயன்ற காங். மாஜி முதல்வர் சிறை வைப்பு: உத்தரகாண்ட் காவல் நிலையத்தில் பரபரப்பு

ஹரித்வார்: வாக்குச்சாவடிக்கு செல்ல முயன்ற முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லிபர்ஹேரி கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் காயம் அடைந்தனர். மங்களூர் வன்முறைக்கு ஆளும் பாஜக தான் காரணம் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் குற்றம்சாட்டினார். தொடர்ந்து லிபர்ஹேரி வாக்குச்சாவடிக்கு செல்ல முயன்ற ஹரிஷ் ராவத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அங்குள்ள காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் உட்பட அனைவரும் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஹரிஷ் ராவத் கூறுகையில், ‘வாக்குச்சாவடியை கைப்பற்றும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகவர்களை வாக்குச் சாவடிகளில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். மங்களூருவில் ஜனநாயகம் அபகரிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கூட அழைத்து செல்லவில்லை’ என்றார். முன்னாள் முதல்வர் ஒருவர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post வாக்குச்சாவடிக்கு செல்ல முயன்ற காங். மாஜி முதல்வர் சிறை வைப்பு: உத்தரகாண்ட் காவல் நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: