கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே செப்டம்பர் 8ம் தேதியான இன்று கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு முன்பதிவு செய்யத் தொடங்கினர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த மாதமே திருமண ஜோடிகளின் எண்ணிக்கை 300ஐ கடந்தது. நேற்று வரை 356 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டன.
இதனால் திருமணத்தை நடத்துவதற்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த குருவாயூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகாலை 5 மணி முதல் தான் திருமண சடங்குகள் தொடங்கும். ஆனால் இன்று அதிகாலை 4 மணி முதலே சடங்குகள் தொடங்கின. திருமணத்தை நடத்துவதற்கு கூடுதல் புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். கோயில் வளாகத்திற்குள் 6 மணமேடைகள் அமைக்கப்பட்டன. உடனுக்குடன் திருமணத்தை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. காலை 8 மணிக்குள் 186 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தன. ஒவ்வொரு ஜோடிக்கும் உறவினர்கள், போட்டோ, வீடியோகிராபர்கள் உள்பட 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நண்பகல் 12 மணிக்குள் அனைத்து திருமணங்களும் நடத்தி முடிக்கப்பட்டன. 356 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்ததால் குருவாயூர் நகரமே இன்று ஸ்தம்பித்து காணப்பட்டது. குருவாயூரில் இன்று எங்கு பார்த்தாலும் திருமண ஜோடிகள் தான் காணப்பட்டனர். மணமக்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் குருவாயூர் முழுவதும் இன்று கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
லாட்ஜுகள், ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குருவாயூர் கோயிலில் தரிசனத்திற்கும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் இந்த நாளில் குருவாயூரில் வைத்து திருமணம் நடந்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக திருமண ஜோடிகள் தெரிவித்தனர்.
The post குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்! ஒரே நாளில் 356 திருமணங்கள்.. appeared first on Dinakaran.