கடந்த 2 தினங்களுக்கு முன் இரு இனத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலியாகினர். மீண்டும் வன்முறை காரணமாக மணிப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்களுடன் மாநில முதல்வர் பிரேன் சிங் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆளுநரை சந்தித்து நிலைமையை விளக்கினார்.
அதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜ்பவனில் ஆளுநர் ஆச்சார்யாவை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த மனுவில், குக்கி இனத்தவர்களின் தனி நிர்வாக கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த 2008ல் குக்கி தேசிய அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி அமைப்புகளுடன் மணிப்பூர் அரசு மேற்கொண்ட செயல்பாடுகளின் இடைநிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்றும், மாநில அரசுக்கு போதிய அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
* டிரோன் தடுப்பு கருவி அமைப்பு
கடந்த 1ம் தேதி முதல் முறையாக இம்பால் மேற்கு பகுதியில் உள்ள கோட்ரூக் கிராமத்தில் தீவிரவாதிகள் டிரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு தீவிரவாதிகளின் டிரோன் தாக்குதல் அடுத்தடுத்து நடந்து வருகிறது. டிரோன் தாக்குதலுக்கு பயந்து இரவில் மக்கள் வீடுகளில் விளக்குகளை அணைத்து வைக்கின்றனர். இந்நிலையில், டிரோன் தாக்குதலை தடுக்க, டிரோன் தடுப்பு கருவிகளை மாநில போலீசாருக்கு சிஆர்பிஎப் வழங்கி உள்ளது. இவற்றை, இம்பால் பள்ளத்தாக்கின் எல்லைப் பகுதிகளில் அசாம் ரைபிள்ஸ் அமைத்துள்ளது.
The post மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநரிடம் முதல்வர் பிரேன் சிங் வலியுறுத்தல் appeared first on Dinakaran.