மதுரை அருகே தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் திருவிழா: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலம்


அலங்காநல்லூர்: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அருகே பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. இதில், சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் அடக்கினர். அலங்காநல்லூரில் நாளை நடக்கும் உலகப்புகழ் ஜல்லிக்கட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்த 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். முன்னதாக காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. காலை 7 மணியளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் கலெக்டர் சங்கீதா தலைமையில், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலையில், அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக 7 கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக திமிலை உயர்த்தி சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல், போக்குகாட்டி களத்தில் நின்று விளையாடின. சுற்றுக்கு 100 காளைகள், 70 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்க முயன்ற 25க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டன. படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். போட்டியில் அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கும், பிடி கொடுக்காமல் விளையாடும் சிறந்த காளை உரிமையாளருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. 2வது இடம் பிடிக்கும் காளை, வீரருக்கு பைக், நாட்டுப்பசு பரிசாக வழங்கப்படும். மேலும், தங்கக்காசு, கட்டில், பீரோ, அண்டா, கிரைண்டர், மிக்சி, சைக்கிள், வேட்டி, துண்டு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

2000 போலீசார் பாதுகாப்பு:
ஜல்லிக்கட்டையொட்டி முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. மேலும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கும் வகையில், ஆங்காங்கே எல்இடி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் காளைகளுக்கான குடிநீர், உணவு மற்றும் வீரர்களுக்கான குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டையொட்டி 6 எஸ்பி, 12 டிஎஸ்பிக்கள், 32 காவல்துறை ஆய்வாளர்கள் என 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. நாளை அலங்காநல்லூரில்: மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை உலகப்புகழ் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியை திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிடுகிறார்.

சிறந்த காளைகள் மற்றும் அவற்றை அடக்கும் வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது. இதனுடன் தங்க மோதிரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். இதற்காக இன்று மதியம் 3.45 மணியளவில் திருச்சி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் சாலை மார்க்கமாக மதுரை வருகிறார். ஏற்பாடுகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி செய்து வருகிறார். அலங்காநல்லூருக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வெகு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

சுவாமி பெயரில் காளை அவிழ்ப்பு
இந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு சாதி பெயர் சொல்லி அழைக்க கூடாது என்னும் காரணத்தினால் கோயில் காளைகள் பாத்தியப்பட்ட சுவாமி பெயரிலும், ஜல்லிக்கட்டு காளைகள், அதன் உரிமையாளர்கள் பெயரிலும் அவிழ்த்து விடப்பட்டன. கால்நடை மருத்துவக்குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் காளைகளை பரிசோதனை செய்தனர். குறிப்பாக காளைகளின் உடல்திறன் மற்றும் கண்களில் மிளகாய் பொடி மற்றும் வேறு ஏதும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என பரிசோதித்தனர். இதேபோல, மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே களமிறக்கப்பட்டனர்.

சூரியூரில் 750 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 550 வீரர்கள் மல்லுக்கட்டு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. சுமார் 750 காளைகள் அழைத்து வரப்பட்டன. 550 மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். இதனிடையே கோயில் காளைகள் கிராம பாரம்பரியப்படி அலங்கரிங்கப்பட்டு, பொங்கல் வைத்து காளைகளுக்கு படையலிட்டு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் காளைகள் களத்துக்கு அழைத்து வரப்பட்டன. வீரர்கள் உறுதி மொழி ஏற்ற பின், காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியை ஆர்டிஓ பார்த்திபன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முதலில் கோயில் காளைகளும், அடுத்தடுத்து வெளியூர் காளைகளும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் ஓடாமல் களத்திலேயே சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு தண்ணி காட்டியது.

வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு மிக்சி, கிரைண்டர், தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், சில்வர் அண்டா, பிளாஸ்டிக் சேர்கள், ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த வீரர், காளைகளுக்கு வீட்டு மனை, பைக்குகள் வழங்கப்பட உள்ளது. காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். போட்டியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மதுரை அருகே தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் திருவிழா: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: