முறைகேடு புகாரில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் பணிநீக்கம்

திருவாரூர்: திருவாரூர் அருகே கச்சனம் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக பணியாற்றி வந்த அதிமுகவை சேர்ந்தவர், முறைகேடு புகார் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக அதிமுகவை சேர்ந்த வெற்றிவேல்(50) மற்றும் இயக்குனர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வந்த ஜெயபால், கடந்த 2 மாதத்துக்கு முன் பணி ஓய்வு பெற்றார். ஆனால் இதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே அவருக்குரிய பண பலன்கள் ரூ.16.53 லட்சம் கிடைப்பதற்கு தலைவர் வெற்றிவேல் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சங்கத்துக்கு செயலாளராக ரவி என்பவர் கூட்டுறவு இணைப்பதிவாளர் மூலம் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் ரவி, எங்கள் சங்கத்துக்கு வேண்டாம் என்று தலைவர் வெற்றிவேல் தெரிவித்ததுடன், அதே சங்கத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் தனசேகரன் என்பவருக்கு செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் சங்க பதிவேடுகளை செயலாளர் தனசேகரன் திருத்தியது தொடர்பாக கூட்டுறவுத்துறைக்கு புகார்கள் சென்றது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த நிர்வாக சீர்கேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி வெற்றிவேலை தலைவர் பதவியில் இருந்து பணி நீக்கம் செய்து கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

The post முறைகேடு புகாரில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் பணிநீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: